Monday, February 21, 2011

அநாதை நாய்கள் ....

அநாதை  நாய்கள் ....ஒரு நாள் எதிர் வீட்டுப் பள்ளி பாலகர்கள் பள்ளிக்கூடமருகில் குப்பைத் தொட்டி ஒன்றில் இருந்து குட்டி நாய் ஒன்றைக் கொண்டு வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் ...நாய்க் குட்டி ரொம்ப அழகாக இருக்கவே நாங்கள் அதை வாங்கி வளர்க்க ஆரம்பித்தோம் .கொஞ்ச நாளில் அது எங்கள் வீட்டில் ஒரு அங்கதினராகவே மாறிப் போனது ...ம்ஹும் ...நாங்களே மாறிப் போனோம் .முகமற்ற மனிதர்கள் ...உணர்வற்ற உறவுகள் ...வியாபார நோக்கம் கொண்ட சமுதாயம் ...இப்படிப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருந்த எங்களுக்கு குட்டி நாய் ஆறுதலாக இருந்தது .பால்புட்டி ,தொட்டில் சகிதமாக பிரவுனி என்ற அந்த குட்டி எங்கள் வீட்டில் ரொம்ப செல்லமாக வளர்ந்து வந்தாள்...ஒருநாள் ...ஒருநாள்..ம்ஹும் சொல்லவே  மனம் பதை பதைக்கிறது ...திடீரென ...அந்த கொடூர நாளில் ,அந்த ஒரே நாளில் எங்கள் ப்ரவுனிக்கு என்ன நேர்ந்ததோ ...ரத்தமாய்க் கழிந்து ,ஒடுங்கிப் போய் எங்களையே பரிதாபமாகப் பார்த்தாள் ...எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியாமல்  அருகில் இருந்து ஒரு வைத்தியரை அழைத்தோம் ...அவர்  வந்து பார்த்து விட்டு ,ஊசியும் போட்டு விட்டு  சரியாகாவிட்டால்  மதுரையிலுள்ள  தன் நண்பனிடம் காட்டுமாறு  கூறி ,நண்பரின் முகவரியைக் கொடுத்துவிட்டு சென்றார் .அடுத்த நாள் ப்ரவுனிக்கு நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டது .அவசர அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்து மதுரைக்கு கொண்டு சென்றோம் ...வழியில் பிரவுனி வலியால்   துடித்தது ...எபோதும் துருதுருவென இருக்கும் பிரவுனி சப்தம் கூடப் போடமுடியாமல் எங்களையே   பரிதாபமாகப் பார்த்தது...எங்களுக்கு அது செய்த சேட்டைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது ...பிரவுனி ஒரு நாள் சாப்பிடக் கொடுத்த பூரியை பாதி தின்று விட்டு மீதியை காக்கா  தின்றுவிடும் என்று அறிவாக மன்னுக்கடியில் புதைத்து வைத்ததை  கூறி என் மகன் அழுதான் ...பிரவுனி எனக்கு வேணும்பா ...என்று என் மகள் அழுதாள்    ...எங்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஒரே பதற்றம் ...டாக்டர் வீடு வந்து விட்டது ...அவசர அவசரமாக பிரவுனியை தூக்கிக் கொண்டு ஓடினோம் ...டாக்டர் பார்த்துவிட்டு சில மருந்துகளும்,ஊசியும் செலுத்தினார் ...பாவம்  ப்ரவுனிக்கு  கத்தக்  கூட முடியவில்லை ...சிறிது நேரம்  கழிந்தது ..."சரியாகிவிடுமா டாக்டர் ... "  -இது  என் மனைவி ...அவள் தான் ப்ரவுநியைப்  பார்த்துப் பார்த்துப் பிள்ளையைப்போல் வளர்த்தவள் ..."பர்வோஸ்  எனும் உயிர் கொல்லி நோய் தாக்கி இருக்கிறது ...சற்றுப் பொறுத்திருந்து பாப்போம் .." இது டாக்டர் .அதற்குள்  ப்ரவுனிக்கு  ரத்தமாய்க் கழிய ஆரம்பித்து விட்டது ....கடுமையான நாற்றம் வேறு ..."என்ன செய்வது டாக்டர் ?"-நாங்கள் ...."பிழைக்காது ...எங்காவது  விட்டு விடுங்கள் ..." டாக்டர் .எங்கள் செல்ல பிரவுனியை தூக்கி கொண்டு வந்து ,அருகில் உள்ள ஒரு தெருவில் விட்டோம்..அது ஓடிப் போய் ஒரு வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்து வழிந்த சாக்கடை நீரை நக்கிக் கொண்டு எங்களையே பார்த்தது ...அதனை சுற்றியும் பல அநாதை நாய்கள் ..".உறவுகள்  தொடர் கதை ..."-எங்கோ தூரத்தில் இளையராஜாவின்  பாட்டு .  என் மனைவியைப் பார்த்தேன் ...உறவுகளைத் தொலைத்த வாழ்க்கையில் ...இடையில் வந்த புது உறவும்  பறிபோன வேதனையில்  மவுனமாய் அவள் கண்களில் இருந்து  தாரை தாரையாய் கண்ணீர்  வழிய ,நான் அவளையே புதிதாய் உணர்ந்தேன் ..."உன் கண்களின் ஓரம் ..எதற்காகவோ ஈரம் ..."  அதே பாடல் தொடர்ந்தது ....மனிதர்கள் ஏன் பிராணிகள் வளர்க்கிறார்கள்? ...நான் சிந்தித்தேன் மனம் வலித்தது...                                  மனிதர்களும் கூட இப்படித்தான் ஆயிரம் உறவுகள் இருந்தும் ...பல நேரங்களில்   அனாதைகளாய்...மனிதம் செத்துக் கொண்டிருப்பதை எண்ணி மௌனமாய் அழுதேன் ....